நெருங்கும் தேர்தல்: மாநில அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க காங். மேலிடம் திட்டம்
தமிழ்நாட்டில் பிப்ரவரி 13-ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கடந்த 4-ம் தேதி நாடு முழுவதும் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் வியூகம் மற்றும் பாரத் நியாய யாத்திரைக்கான தயாரிப்புகள் உள்பட மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்தனர்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயதமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நாளை மறுநாள் தொடங்கிறது. இந்த கூட்டம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை மறுநாள் தெலுங்கானாவில் தொடங்கும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து மாநாட்டை தொடங்குகின்றன.
அந்த வகையில், உத்தரகாண்டில் வரும் 28-ம் தேதியும் , ஒடிசாவில் வரும் 29-ம் தேதியும் , டெல்லியில் பிப்ரவரி 3-ம் தேதியும், கேரளாவில் பிப்ரவரி 4-ம் தேதியும், இமாச்சலப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி 11-ம் தேதியும், தமிழகத்தில் பிப்ரவரி 13-ம் தேதியும், ஜார்க்கண்டில் பிப்ரவரி 15-ம் தேதியும் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.