ஏக்நாத் ஷிண்டே, பிற எம்.எல்.ஏ.க்களுடன் இணைய எனக்கும் வாய்ப்பு வந்தது; சஞ்சய் ராவத் எம்.பி.


ஏக்நாத் ஷிண்டே, பிற எம்.எல்.ஏ.க்களுடன் இணைய எனக்கும் வாய்ப்பு வந்தது; சஞ்சய் ராவத் எம்.பி.
x

அசாம் சென்று ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற எம்.எல்.ஏ.க்களுடன் இணைவதற்கு எனக்கும் வாய்ப்பு வந்தது என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஸ் அகாடியின் ஆட்சி நீடித்து வந்த நிலையில், சட்டசபை மேலவை தேர்தலுக்கு பின்பு, சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் 20ந்தேதி இரவில், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓரணியாக அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் புளூ ரேடிசன் என்ற ஆடம்பர ஓட்டலில் தங்கினர். அவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்களை திரும்ப வரும்படி சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தும் பலனில்லை.

மகா விகாஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும்படி ஷிண்டே டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில், மராட்டியத்தில் ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. களத்தில் இறங்கியது. அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 28ந்தேதி டெல்லிக்கு புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் அன்றிரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

அதன்பின்னர், மராட்டிய சபாநாயகர் கடந்த வியாழ கிழமை (30ந்தேதி) அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொண்டனர். கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கடந்த 29ந்தேதி இரவு ராஜினாமா செய்கிறேன் என கூறி பதவி விலகினார். அவர், எனது சொந்த மக்களே நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என கூறிய தகவல் சாம்னா பத்திரிகையில் வெளிவந்தது. அவர் பதவி விலகிய சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என கவர்னர் கூறினார்.

இதன்பின்னர், அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பட்னாவிஸ் துணை முதல்-மந்திரி என்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியானது. இதன்படி, ஷிண்டே முதல்-மந்திரியானார்.

இந்த சூழலில், அசாம் சென்று ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற எம்.எல்.ஏ.க்களுடன் இணைவதற்கு எனக்கும் வாய்ப்பு வந்தது என சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் இன்று கூறியுள்ளார்.

எனினும், அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம் என அதனை புறந்தள்ளினேன். ஏனெனில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவை நான் பின்பற்றுபவன் என கூறியுள்ளார். உங்கள் பக்கம் உண்மை இருக்கும்போது, ஏன் பயப்பட வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, மத்தியில் இருந்து பட்னாவிசால் முதல்-மந்திரி பதவியை வாங்க முடியவில்லை. எனது வாயால் அவரை துணை முதல்-மந்திரி என கூறுவது அவருக்கு பொருந்தவில்லை. ஆனால், அது அவர்களது உட்கட்சி விவகாரம். அதுபற்றி நான் பேச முடியாது என்று கூறியுள்ளார்.

சிவசேனாவை மும்பை மற்றும் மராட்டியத்தில் இருந்து அழிக்க பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால், அது நடக்காது என்று கூறியுள்ளார். மராட்டியத்தின் புதிய அரசு வருகிற திங்கட் கிழமையன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.


Next Story