தசரா யானை பாகன்களுடன் உணவு சாப்பிட்ட மந்திரி எச்.சி.மகாதேவப்பா
மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானை பாகன்களுடன் மந்திரி எச்.சி.மகாதேவப்பா உணவு சாப்பிட்டார்.
மைசூரு
மைசூரு தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தீவிரமாக செய்து வருகிறது.
மைசூரு தசரா கமிட்டி குழு தலைவராக மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா உள்ளார். அவர் மைசூருவில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்க உள்ளன. 2 கட்டமாக யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
மேலும் யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி, சுமை தூக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
காலை சிற்றுண்டி
யானைகளின் பாகன்களும் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் யானை பாகன்களின் குழந்தைகளுக்கு அரண்மனை வளாகத்தில் தற்காலிக பள்ளிக்கூடமும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழ் ஆசிரியை ஒருவர் மூலம் அவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
காட்டு பகுதியில் வசித்து வந்த யானை பாகன்களுக்கு மைசூரு அரண்மனையில் சிறப்பான உபசரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட நிர்வாகம் சார்பில் யானை பாகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு காலை சிற்றுண்டி விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா கலந்துகொண்டு, யானை பாகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உணவு பரிமாறினார். மேலும் யானை பாகன்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை அவர் சாப்பிட்டார்.
குழு புகைப்படம்
இதையடுத்து பாகன்களின் குடும்பத்தினரின் கலாசார நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் வேடங்கள் அணிந்து தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடினார்கள்.
இதனை மந்திரி எச்.சி.மகாதேவப்பா பார்த்து ரசித்தார். மேலும் பாகன்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் கொஞ்சி பேசினார். அத்துடன் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஹரீஷ்கவுடா, தன்வீர் சேட், எம்.எல்.சி. மஞ்சேகவுடா, கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ், மேயர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீமா, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி காயத்ரி, மாநகராட்சி கமிஷனர் அப்துல் ரகுமான், வனத்துறை அதிகாரி சவுரப் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சமயத்தில் தசரா யானைகளுக்கும் சத்தான உணவுகளை மந்திரி எச்.சி.மகாதேவப்பா வழங்கினார்.