நிதி ஒதுக்க அரசு தாமதிப்பதால் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளில் தொய்வு
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் ஏற்படுவதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மங்களூரு:-
கலெக்டர் அலுவலக கட்டிடம்
தட்சிண கன்னடா மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும்படி கடந்த 2014-ம் ஆண்டு அரசு அதிகாரிகள் தரப்பில் அப்போதைய, முதல்-மந்திரி சித்தராமையாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்த ரமாநாத் ராய் ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.இந்த கலெக்டர் அலுவலகம் 5.8 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2.26 லட்சம் சதுர அடியில் வருவாய் துறை அலுவலகம் மற்றும் 38 இதர துறைகள் சார்ந்த அலுவலகம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம், 50 கார்கள், 100 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான வசதிகளுடன் கட்டப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி 2014-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இந்தநிலையில் திடீரென்று குறுக்கிட்ட பசுமை தீர்ப்பாயம் மரங்களை வெட்டி கலெக்டர் அலுவலகம் கட்டப்பட இருப்பதாக வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பணிகள் முடங்கியது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது மாவட்ட பொறுப்பு மந்திரியாக அனில்குமார் இருந்தார். இவர் கலெக்டர் அலுவலக கட்டிடப்பணிக்கு கூடுதல் செலவாகும் என்று கூறி, ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்தார்.
ஒப்புதல் வழங்க காலதாமதம்
இதையடுத்து முதற்கட்ட பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி முடிந்தது. பின்னர் 2-ம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டது. அதன்படி ரூ.29 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக ஒப்புதல் வழங்கவில்ைல. பா.ஜனதா அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், இதுவரை பணிகள் முடியவில்லை.
தற்போது கட்டிடப்பணிகளுக்கான மதிப்பு உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே 2-ம் கட்டப்பணிக்கு ரூ.32 கோடி உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு சார்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே துரிதமாக பணிகளை முடிக்கும்படி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.