அரிசி வழங்கும் விஷயத்தில் பா.ஜனதாவுக்கு மனிதநேயம் உள்ளதா? -சித்தராமையா கேள்வி
அரிசி வழங்கும் விஷயத்தில் விரோத அரசியல் செய்யும் பா.ஜனதாவுக்கு மனிதநேயம் உள்ளதா? என்று முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:-
கூடுதல் அரிசி
கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கலுக்கு பிறகு முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் நாளை(இன்று) டெல்லி செல்கிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதே போல் உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்திக்கிறேன். உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா மத்திய உணவுத்துறை மந்திரியை நேரில் சந்தித்து கர்நாடகத்திற்கு கூடுதல் அரிசி ஒதுக்குமாறு கோருகிறார்.
ஏழைகளுக்கு எதிரான...
மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கார் மாநிலங்களுடன் அரிசி கொள்முதல் குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடகத்திற்கு மாதந்தோறும் 2 லட்சத்து 28 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது. சத்தீஸ்காரில் இருந்து அரிசி கொள்முதல் செய்தால் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது. தெலுங்கானாவில் அரிசி கையிருப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
மத்திய அரசின் மூன்று அமைப்புகளுடன் பேசி இருக்கிறோம். இந்திய உணவு கழகத்தினர் முதலில் அாிசி கொடுப்பதாக கூறிவிட்டு பிறகு நிராகரித்துவிட்டனர். இது விரோத அரசியல் ஆகும். ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். விரோத அரசியல் செய்யும் பா.ஜனதாவுக்கு மனித நேயம் உள்ளதா?. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை கொண்டது என்று பிரதமர் மோடி அடிக்கடி சொல்கிறார். இது தான் அவர் கடைபிடிக்கும் கூட்டாட்சி தத்துவமா?. மத்திய அரசு, நெல் சாகுபடி செய்கிறதா?. மாநிலங்களின் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு நெல் கொள்முதல் செய்கிறது. உணவு பாதுகாப்பு சட்டத்தை காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது.
இந்த சட்டத்தால் தான் மாநிலங்களுக்கு மத்திய அரசு அரிசி வழங்குகிறது. ஏழை மக்களுக்கு 10 கிலோ அரிசி கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளோம். நாங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.