பா.ஜனதா உறுப்பினர்களின் மோசமான செயல்பாடுகளால் சபைக்கு அவமரியாதை- முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு


பா.ஜனதா உறுப்பினர்களின் மோசமான செயல்பாடுகளால் சபைக்கு அவமரியாதை- முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா உறுப்பினர்களின் மோசமான செயல்பாடுகளால் சட்டசபைக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் மீது ஆவணங்களை கிழித்து எறிந்தது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியாவது:-

ஜனநாயக மாண்புகள்

கர்நாடக சட்டசபையில் இன்று(நேற்று) நடந்தது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துகிறோம். இதை பா.ஜனதாவினரின் வயிறு எரிகிறது. ஜனநாயகத்தில் அர்த்தப்பூர்வமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதனால் தான் நாங்கள் பா.ஜனதா இல்லாத கர்நாடகம் என்று பேசவில்லை.

ஜனநாயக மாண்புகள் மீது பா.ஜனதாவுக்கு மரியாதை இல்லை. ஜனநாயக ரீதியில் இங்கு தர்ணா நடத்த அனுமதி இருக்கிறது. ஆனால் சபாநாயகர் மீது ஆவணங்களை கிழித்து எறிவது, அவருக்கு அவமானம் இழைப்பது சட்டவிரோதம். இது அநாகரீகமானது. அருவெறுக்கத்தக்கது. இதற்கு முன்பு என்ன நடைபெற்றதோ, அதன்படியே நாங்கள் நமது மாநிலத்திற்கு வந்த விருந்தினர்களை கவுரவித்துள்ளோம்.

பா.ஜனதாவால் முடியவில்லை

சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு மிக மோசமாக பா.ஜனதாவினர் நடந்து கொண்டுள்ளனர். நாங்களும் எதிர்க்கட்சியாக இருந்துள்ளோம். ஆனால் எப்போதும் நாங்கள் இவ்வாறு நடந்து கொண்டது இல்லை. எதிர்க்கட்சி தலைவரை கூட தேர்ந்தெடுக்க பா.ஜனதாவால் முடியவில்லை. விருந்தினர்களை கவுரவித்தால் நமது மாநிலத்தின் மீதான மரியாதை அதிகரிக்கும்.

:நாங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், தலித் உள்ளிட்டவா்களுக்கு ஆதரவாக போராடி ஆட்சிக்கு வந்துள்ளோம். பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம், அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை. சட்டசபையின் கவுரவத்திற்கு பா.ஜனதா உறுப்பினர்களின் மோசமான செயல்பாடுகளில் அவமரியாதை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story