மாநகராட்சி ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பான சர்ச்சை: திருவனந்தபுரம் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் - சசி தரூர்


மாநகராட்சி ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பான சர்ச்சை: திருவனந்தபுரம் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் - சசி தரூர்
x

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் செயல் அம்பலமாகியிருப்பது அவமானமான ஒன்று என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறினார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஊழியர்கள் பணி நியமனம் தொடர்பாக திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு கடிதம் எழுதியதாக புகார் எழுந்துள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.அதில் அவர் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை மாநகராட்சி பணிக்காக சிபாரிசு செய்யும்படி கோரியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி கோரியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் அந்த கடிதம் அனுப்பவில்லை என மறுத்துள்ள மேயர் ராஜேந்திரன் கூறியதாவது, "கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நான் திருவனந்தபுரத்தில் இல்லை. இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "மாநகராட்சி பணியிடங்களை நிரப்ப தன்னுடைய கட்சி செயலாளரிடம் பெயர் பட்டியல் அனுப்புமாறு கடிதம் எழுதிய திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் செயல் இப்போது அம்பலமாகியிருப்பது அவமானமான ஒன்று. இந்திய(கேரளா) இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அல்லல்படும்போது, இந்த நடவடிக்கையால் அவர் துரோகம் இழைத்துள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இதனிடையே மேயர் எஸ் ஆர்யா ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பினராயி விஜயனை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் விரிவான விசாரணை நடத்த கோரியிருந்தார். இதனையடுத்து திருவனந்தபுரம் மேயர் எஸ் ஆர்யா ராஜேந்திரனின் புகாரை விசாரிக்க குற்றப்பிரிவுக்கு அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கடிதம் சர்ச்சையால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பதற்றம் வலுத்து வருகிறது. மாநகர சபையில் இன்று பாஜக மற்றும் சிபிஎம் கவுன்சிலர்கள் மோதிக்கொண்டனர். இதனால் சலசலப்பு நிலவியது. இந்த மோதலில் சிபிஎம்-பாஜக கவுன்சிலர்கள் காயமடைந்தனர்.இதற்கிடையில், யுடிஎப் கவுன்சிலர்களும் மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்தினர்.


Next Story