பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம்


பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தல் பிரதமர் மோடிக்கு, தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு ஒரு கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

நான் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யும்படி வலியுறுத்தி இருந்தேன். இதை நான் கடந்த 1996-ம் ஆண்டே கையில் எடுத்தேன். அது தற்போது புதிய நாடாளுமன்ற அலுவலகத்தில் தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு தேவேகவுடா பதிவிட்டுள்ளார்.

தேவேகவுடா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் ஏராளமான பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 50 சதவீத அளவில் உள்ளது. இது பெண்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நேரம். அதுமட்டுமல்லாது அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் ஆகும். கடந்த 1996-ம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்றபோது பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தேன். அதனால் அந்த இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.


Next Story