பத்ராவதி இரும்பாலையை மூடும் முடிவை கைவிட கோரிக்கை-ராகவேந்திரா எம்.பி. கோரிக்கை
பத்ராவதி இரும்பாலையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ராகவேந்திரா எம்.பி. நேரில் கோரிக்கை விடுத்தார்.
சிவமொக்கா:-
பத்ராவதி இரும்பாலை
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுனில் வி.ஐ.எஸ்.எல். இரும்பாலை உள்ளது. தற்போது அந்த இரும்பாலை செயல்படாமல் இருந்து வருகிறது. அங்கு எந்த பணிகளும் நடக்கவில்லை. இதற்கிடையே இரும்பாலையை மூட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அந்த இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இரும்பாலையை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மீண்டும் இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ராகவேந்திரா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. அதையடுத்து 'செயில்' எனப்படும் இரும்பாலை துறையின் புதிய தலைவர் அமரேந்து பிரகாசையும், ராகவேந்திரா எம்.பி. சந்தித்து பேசினார். அவரிடமும் வி.ஐ.எஸ்.எல். இரும்பாலையை மூட மத்திய அரசு எடுத்த முடிவை கைவிட வேண்டும் என்று ராகவேந்திரா கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி மீண்டும் இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர அனைத்து நிதி உதவிகளும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கோரிக்கை
இதையடுத்து ராகவேந்திரா எம்.பி., இரும்பாலை துறை புதிய தலைவர் அமரேந்து பிரகாசிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வி.ஐ.எஸ்.எல். இரும்பாலை செயல்பட மத்திய அரசு ரூ.150 கோடி மானியம் வழங்க தீர்மானித்து இருந்தது. ஆனால் வேறு ஒரு காரணத்திற்காக இரும்பாலை செயல்படாமல் போனது. அதனால் மீண்டும் இரும்பாலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'இரும்பாலை துறை தலைவரிடம் பேசுகையில் வி.ஐ.எஸ்.எல். இரும்பாலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தேன். அதுபோல் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்தேன்' என்றார்.