கோலாரில் 4-வது நாளாக தொடர் மின்தடை


கோலாரில் 4-வது நாளாக தொடர் மின்தடை
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயல் உள்பட கோலார் மாவட்டத்தில் 4-வது நாளாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

கோலார் தங்கவயல்

அறிவிக்கப்படாத மின்தடை

கர்நாடக மாநிலம் பெங்களூருவையொட்டி கோலார் மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், பெங்களூருவில் இடம் கிடைக்காத தொழில் நிறுவனங்கள் கோலாரில் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றன.

இதனால் கோலார் மாவட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், கோலார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருந்து வருகிறது.

அதாவது தினமும் சுமார் 8 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. எந்தவித அறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

4-வது நாளாக...

இந்த நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் கோலார் தங்கவயல் உள்பட மாவட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்தடை நிலவியது. காலை முதல் இரவு வரை சுமார் 6 மணி

நேரத்துக்கு மேலாக மின்தடை நிலவியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். தொடர்ந்து மின்தடை நிலவி வருவதால் மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

மேலும் தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருந்து வருவதால் அரசுக்கு எதிராக மக்கள் கடும் ஆக்ரோஷத்தை வெளிபடுத்தி உள்ளனர். 200 யூனிட் இலவச மின்சாரத்திற்காக அரசு, அடிக்கடி மின்தடை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

தொடர்ந்து மின்தடை இருந்து வருவதால் பெஸ்காம் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கோலார் மாவட்டத்தில் உள்ள பெஸ்காம் அலுவலகங்களுக்கு ஏராளமான போன்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில், கோலார் தங்கவயலில் மின்தடையை சரி செய்ய கோரி நேற்று பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் தங்கவயலில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள், மாணவ-மாணவிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.

இதனை சரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த மனுவை வாங்கி கொண்ட ரூபாகலா சசிதர், இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story