வணிக வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு; காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம்
பெங்களூருவில், வணிக வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், வணிக வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது.
5-வது மாடியில் இருந்து...
பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரிகேட் ரோட்டில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வணிக வளாகத்திற்கு ஒரு இளம்பெண் தனது நண்பர்கள் சிலருடன் வந்தார். பின்னர் அந்த இளம்பெண்ணும், அவரது நண்பர்களும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு 5-வது மாடியில் உள்ள கடைக்கு குளிர்பானம் குடிக்க சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் 5-வது மாடியில் இருந்து இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இளம்பெண் உயிருக்கு போராடினார். அதுபோல் வாலிபரும் பலத்த காயம் அடைந்து இருந்தார். இதனை பார்த்து வணிக வளாகத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கப்பன் பார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண், வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். வாலிபருக்கு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்யும் நோக்கில்...
இதற்கிடையே தற்கொலை செய்யும் நோக்கில் இளம்பெண்ணும், வாலிபரும் 5-வது மாடியில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிரிகேட் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவியான லியா என்பவர் உயிரிழந்து உள்ளார். அவரது நண்பர் கிரீஷ் பீட்டர் என்பவர் படுகாயம் அடைந்து உள்ளார். மாணவி பெங்களூரு பிரேசர் டவுனை சேர்ந்தவர். மாணவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் தங்களது நண்பர்கள் சிலருடன் வணிக வளாகத்திற்கு பொருட்களை வாங்க வந்து உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5-வது மாடியில் இருந்து லியாவும், கிரீசும் தவறி விழுந்து உள்ளனர். அவர்கள் தற்கொலை செய்யும் நோக்கில் மாடியில் இருந்து குதிக்கவில்லை. சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
காதலர்கள் இல்லை
படுகாயம் அடைந்த மாணவரான கிரீஷ் கூறும்போது, நானும், லியாவும் நண்பர்கள் தான். காதலர்கள் இல்லை. மாடியில் இருந்து 2 பேரும் தற்கொலை செய்ய வேண்டும் என்று குதிக்கவில்லை. 5-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு வரும்போது கால்தவறி லியா கீழே விழுந்தார்.
அவரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நானும் மாடியில் இருந்து குதித்தேன். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார். அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.