பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மாயம்: 25 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மாயமாகி உள்ள சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலம் கராலியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் ஏராளமான நாணயங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சமீபத்தில், இந்த நாணயங்கள் குறைவாக இருப்பதாக வங்கி அதிகாரிகளுக்கு தோன்றியது.
எனவே, நாணயங்கள் எண்ணும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியின் இறுதியில், ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்தநிலையில், இவ்வழக்கில் நேற்று 25 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.
டெல்லியிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், தவுசா, கராலி, சவை மாதோபூர், ஆல்வார், உதய்பூர், பில்வாரா உள்பட 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 பேருக்கு சொந்தமான இடங்களில் இச்சோதனை நடந்தது.