பெங்களூருவில் ரோந்து போலீசார், இன்ஸ்பெக்டர்களுக்கு நவீன கேமராக்கள் வழங்கப்பட்டது
பெங்களூருவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உடலில் பொருத்தும் வகையில் நவீன கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உடலில் பொருத்தும் வகையில் நவீன கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கைகள்
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக தயானந்த் பொறுப்பு ஏற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் உதவி தேவை பட்டாலோ, குற்றங்கள் நடந்தாலோ 112 எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 9480801000 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம் என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் அறிவித்திருந்தார்.
உடலில் பொருத்தும் கேமரா
அதன்படி, பெங்களூரு நகரில் உள்ள 111 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 111 இன்ஸ்பெக்டர்களும் பணியின் போது கட்டாயமாக உடலில் பொருத்தும் கேமராவை அணிய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 111 இன்ஸ்பெக்டர்களுக்கும் உடலில் பொருத்தும் கேமராக்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக இன்ஸ்பெக்டர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. அதாவது போராட்டம், பிற சங்கங்கள், அமைப்புகள் தர்ணாவில் ஈடுபடும் போது, அவர்களை கைது செய்யும் போது இன்ஸ்பெக்டர்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. புகார் அளிக்க வரும் நபர்களிடம் சரியாக நடந்து கொள்வதில்லை, நட்புறவை பின்பற்றவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டது.
தற்போது இன்ஸ்பெக்டர்கள் உடலில் கேமரா பொருத்தி இருப்பதன் மூலம் அவர்களை தவறு செய்கிறார்களா? என்பது தெரிந்துவிடும் என போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
241 ரோந்து போலீசாருக்கு கேமரா
இன்ஸ்பெக்டர்களை போன்று ஒய்சாலா வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் 241 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் உடலில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஒய்சாலா வாகனத்தில் செல்லும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உடலில் பொருத்தி இருக்கும் கேமரா நேரடியாக கட்டுப்பாட்டு அறை (கமாண்ட் சென்டர்) இணைக்கப்பட்டு இருக்கும். அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இதன்மூலம் ஒய்சாலா போலீசாரின் நேர்மை, அவர்களது செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க முடியும். பொதுமக்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்று போலீஸ் கமிஷனர் தயானந்த் கூறியுள்ளார்.