சட்ட விரோதமாக நியமிக்கப்பட்ட மேற்கு வங்காள மந்திரி மகள் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம்


சட்ட விரோதமாக நியமிக்கப்பட்ட மேற்கு வங்காள மந்திரி மகள் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம்
x

மேற்கு வங்காளத்தில் சட்ட விரோதமாக ஆசிரியராக நியமிக்கப்பட்ட மந்திரியின் மகளை பணியில் இருந்து நீக்கி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஆசிரியர் பணி

மேற்கு வங்காளத்தில் கல்வித்துறை இணை மந்திரியாக இருப்பவர் பரேஷ் சந்திர அதிகாரி. இவருடைய மகள் அங்கிதா அதிகாரி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

இதை எதிர்த்து மற்றொரு தேர்வர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆசிரியர் பணியிட தேர்வில் அங்கிதாவை விட தனக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்தபோதிலும், அந்த இடம் மறுக்கப்பட்டு இருப்பதாக அவர் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அவிஜித் கங்கோபாத்யாய், மந்திரி மகள் அங்கிதா அதிகாரியை நேற்று பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஊதியத்தையும் 2 தவணைகளாக மாநில அரசு கருவூலத்தில் செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

மந்திரி மகள் சட்ட விரோதமாக ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மந்திரி பரேஷ் சந்திர அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. குறிப்பாக கடந்த 17-ந்தேதி ஆஜராகுமாறு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 3 மணிக்குள் ஆஜராகுமாறு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் அவர் ஆஜராகாததால் அவர் மீதும், மகள் அங்கிதா மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

அதிகாரிகள் முன் ஆஜர்

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மந்திரி பரேஷ் சந்திர அதிகாரி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

சட்ட விரோதமாக மகளை பணியில் அமர்த்திய விவகாரத்தில் மந்திரி பரேஷ் சந்திர அதிகாரிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசு வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story