பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு, மே.12-
கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஓட்டு எண்ணிக்கை
சிக்காவி மக்கள் என் மீது அன்பு காட்டியுள்ளனர். அதற்காக நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். தேர்தலை எனது தொகுதி மக்கள் திருவிழாவை போல் கொண்டாடினர். எனக்கு எதிராக சதி செய்தனர். அவதூறு பரப்பினர். ஆனால் சிக்காவி தொகுதியில் நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் 107 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறின.
ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு அது மாறியது. தற்போதும் அதே நிலை தான் ஏற்படும். பிரதமர் மோடியின் பிரசாரத்தால் எங்களுக்கு ஆதரவு அதிகரித்தது. இளைஞர்கள், பெண்கள், எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தனிப்பெரும்பான்மை
வேண்டுமானாலும் இதை நான் கூறுவதை காகிதத்தில் எழதி வைத்து கொள்ளுங்கள். ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு இதுபற்றி என்னிடம் கேளுங்கள். பா.ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் எங்கும் கூறவில்லை. ஆனால் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறினேன். இந்த கருத்தில் இப்போதும் உறுதியாக உள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.