தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் பா.ஜனதா இன்று போராட்டம்
காவிரி விவகாரத்தில் தண்ணீர் திறந்துள்ள காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் போராட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
அணுகவில்லை
காவிரி விவகாரம் குறித்து கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மாநில காங்கிரஸ் அரசு சரியான முறையில் அணுகவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் சரியான முறையில் கர்நாடக அரசு வாதத்தை எடுத்து வைக்கவில்லை. அதனால் தமிழகத்திற்கு மேலும் 7½ டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
குடிநீர் உத்தரவாதம்
அடுத்தக்கட்டமாக என்ன செய்கிறோம் என்பதை இந்த அரசு கூறவில்லை. இந்த விவகாரத்தை பா.ஜனதா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. காவிரி படுகையில் உள்ள மாவட்டங்களில் பா.ஜனதா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் அரசை கண்டித்து பெங்களூருவில் நாளை (இன்று) போராட்டம் நடத்துகிறோம். இந்த காங்கிரஸ் அரசு உத்தரவாத திட்டங்கள் குறித்து பெருமையாக பேசுகிறது. ஆனால் அந்த திட்டங்களையும் சாியான முறையில் அமல்படுத்தவில்லை.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பிராண்டு பெங்களூரு என்கிறார். ஆனால் பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவது குறித்து பேசுவது இல்லை. எங்களுக்கு குடிநீர் உத்தரவாதம் தேவை. பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 4½ டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு பேசுவது இல்லை. தமிழ்நாடு அதிக நீரை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்துள்ளது. இதுகுறித்து இந்த அரசு பேசுவது இல்லை.
நிவாரண பணிகள்
காவிரி விவகாரத்தில் தங்களின் தோல்விகளை மறைக்க காங்கிரஸ் அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசை குறை சொல்கிறார்கள். வறட்சி வந்தால் மத்திய அரசை கை காட்டுகிறார்கள். கர்நாடக அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டியது தானே. மக்கள் காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்துள்ளனர். ஆனால் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்கிறது.
காவிரி பிரச்சினை வரும்போது அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் தண்ணீர் திறப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். அதனால் நாங்கள் பேசுகிறோம். காவிரி நீர் வழங்குவதை நிறுத்த ஏற்கனவே கடந்த காலங்களில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது.
வறட்சி தாலுகாக்கள்
அதற்கு பதிலாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும். காவிரி படுகையில் உள்ள தாலுகா விவசாயிகளுக்கு இந்த அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சி தாலுகாக்களை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.