எதிர்க்கட்சி பிரமுகரின் நிச்சயமான 25 வயது மகளை இழுத்துக்கொண்டு ஓடிய 47 வயது பாஜக தலைவர்
உத்தரப்பிரதேசம் சமாஜ்வாதிக் கட்சிப் பிரமுகரின் 25 வயது மகளை, பாஜகவின் 47வயதான மாவட்ட செயலாளர் இழுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ
உத்தரப்பிரதேசம் ஹர்தோய் மாவட்ட பா.ஜ.க. செயலாளராக இருப்பவர் ஆஷிஸ் சுக்லா (வயது47). இவருக்கு திருமணமாகி 21 வயதில் ஒரு மகனும், 7வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதிக் கட்சி பிரமுகரின் 25 வயது மகளுடன், ஆஷிஸ் சுக்லாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி, தங்கள் தொடர்பை வலுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சமாஜ்வாதிக் கட்சி பிரமுகர் தனது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார். இதையறிந்த, பா.ஜ.க.வின் ஆஷிஸ் சுக்லா, 25 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடியுள்ளார்.
மகளைக் காணவில்லை என பல இடங்களில் தேடிய நிலையில் சமாஜ்வாதிக் கட்சி பிரமுகருக்கு ஆஷ்ஸ் சுக்லாவுடன் தனது மகளுக்கு தொடர்பு இருந்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக ஆஷிஸ் சுக்லா மீது சமாஜ்வாதிக் கட்சிப் பிரமுகர் புகார் செய்துள்ளார்.
இந்த சம்பவம் பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும்பரபரப்பையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பா.ஜ.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆஷிஸ் சுக்லா விடுவிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
பாஜக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் கணேஷ் பதக் கூறுகையில் " கடந்த சில மாதங்களாக கட்சியில் பெரிதாக செயல்படாமலேயே சுக்லா இருந்தார். கட்சியில் ஆர்வமில்லாமல் இருந்ததால் அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவரை நீக்கியது. அவரின் செயல்பாடுகளும் பாஜக கொள்கைக்கு விரோதமாக இருந்ததால் நீக்கப்பட்டார். இனிமேல் ஹர்தோய் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்
ஹர்தோய் போலீஸ் சூப்பிரெண்டு அனில் குமார் யாதவ் கூறுகையில் " சுக்லாவுக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சுக்லாவின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. சுக்லா மற்றும் அந்த பெண்ணின் செல்போன் எண்ணும் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடிவருகிறோம், விரைவில் பிடித்துவிடுவோம்"எனத் தெரிவித்தார்