தெலுங்கானாவில் பா.ஜ.க. எம்.பி. வீடு மீது தாக்குதல்; 8 பேர் மீது வழக்கு பதிவு
தெலுங்கானாவில் பா.ஜ.க. எம்.பி. வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர் அரவிந்த் தர்மபுரி. இந்நிலையில், அவரது வீடு மீது மர்ம கும்பல் நேற்றுதாக்குதல் நடத்தி உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த குண்டர்கள், சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ் மற்றும் மகள் கவிதா ஆகியோரின் உத்தரவின் பேரில், ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டனர்.
எனது தாயாரையும் அவர்கள் அச்சுறுத்தி உள்ளனர். வீட்டை சூறையாடியதுடன், எனது தாயாரையும் மிரட்டி, அமளி ஏற்படுத்தி விட்டு சென்றனர் என தெரிவித்து உள்ளார்.
அதற்கு முன்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. எம்.பி. பேசும்போது, தெலுங்கானா முதல்-மந்திரியின் மகளான கவிதாவை தாக்கி பேசினார். காங்கிரசிடம் இருந்து கவிதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.
காங்கிரசில் இணையும்படி கவிதாவிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார் என பேசியுள்ளார். ஒட்டுமொத்த நாடும் கேலி செய்யக்கூடிய ஒரு முதல்-முந்திரி என சந்திரசேகர ராவையும் தாக்கி பேசியுள்ளார்.
கே.டி. ராமராவ், தனது சகோதரியை இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என குற்றச்சாட்டாக கூறினார். அதற்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி. பேசும்போது, கவிதாவை வாங்கி நாங்கள் என்ன செய்ய போகிறோம் ராமராவ்?? கவிதாவை வாங்கி வர்த்தகம் செய்யும் கட்சி ஒன்றும் நாங்கள் நடத்தவில்லை என்று அவர் பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், எம்.பி.யின் வீடு மீது தாக்குதல் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில், ஐதராபாத் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.