கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பீகார் சிறுமி மண்டியாவில் மீட்பு
கடத்தப்பட்டதாக தேடப்பட்ட பீகார் சிறுமி மண்டியாவில் போலீசாரால் மீட்கப்பட்டார்
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் பீகாரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து மாயமானார். உடனே அவரது சகோதரி அந்த பகுதியில் தேடிப்பார்த்தார்.
ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் அவர் நெலமங்களா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமி கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கினர்.
இந்த நிலையில் சிறுமி, மண்டியா மாவட்டம் மத்தூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மத்தூருக்கு சென்றனர். அங்கு சிறுமி, வாலிபர் உள்பட 2 பேருடன் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கடத்தப்படவில்லை என்பதும், விருப்பத்தின்பேரில் நெலமங்களாவில் இருந்து மண்டியா மாவட்டம் மத்தூருக்கு அரசு பஸ்சில் வந்ததும் தெரிந்தது.
மேலும் வாலிபர் உள்பட 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை அவரது குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
====================