கவர்னரை சந்திக்க நேரம் கேட்டார் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்....!
பீகாரில் சமீப நாட்களாக பா.ஜனதாவுக்கும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும் இடையே உரசல்களும் ஏற்பட்டு வருகின்றன.
பாட்னா,
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்று உள்ளது. இந்த கட்சியின் முன்னாள் எம்.பி. ஆர்.சி.பி.சிங், மத்திய மந்திரிசபையிலும் இடம் பெற்றிருந்தார்.
இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் மத்திய மந்திரி சபையில் யாரும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம்பெறப்போவதில்லை என ஐக்கிய ஜனதாதளம் தெரிவித்து உள்ளது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. மேலும் சமீப நாட்களாக பா.ஜனதாவுக்கும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும் இடையே உரசல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து கட்சியினருடன் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக கவர்னரை சந்திக்க முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேரம் கோரியுள்ளார். இதனால் பீகாரில் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் பீகார் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த 16 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பாஜகவை கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் கழற்றிவிட திட்டமிட்டுள்ளதால் முன்கூட்டியே பதவி விலக முடிவு என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.