இது என்னடா கொடுமை...! உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் தான் உள்ளார்...!


இது என்னடா கொடுமை...! உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் தான் உள்ளார்...!
x
தினத்தந்தி 18 Aug 2023 10:50 AM IST (Updated: 18 Aug 2023 11:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிச்சையெடுத்தல் சட்டப்படி குற்றமாகும். தமிழ்நாட்டிலும் பிச்சை எடுத்தல் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

மும்பை

நம் நாட்டில் பிச்சை எடுப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்தியாவில் ஒரு சாதாரண பிச்சைக்காரர் பிச்சை எடுத்தே பெரிய கோடீஸ்வரனான கதை உங்களுக்கு தெரியுமா...?

அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ள செய்தியில். மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்ற பிச்சைக்காரர் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

வறுமை காரணமாக பாரத் ஜெயின் தனது படிப்பை பாதியில் விட்டு விட்டு பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்து உள்ளார். தற்போது பாரத் ஜெயினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், பாரத் ஜெயின் தனது பிள்ளைகள் கல்வி கற்கவும், கல்வியை சிறந்த முறையில் வெற்றிகரமாக முடிக்கவும் வைத்து உள்ளார்.

பாரத் ஜெயின் சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை பாரத் ஜெயின் வைத்துள்ளார். அவர் தானேயில் இரண்டு கடைகளை வாங்கியுள்ளார், அதன் மூலம் மாத வாடகை 30,000 ரூபாய் கிடைக்கும். பாரத் ஜெயின் அடிக்கடி சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது மும்பை ஆசாத் மைதானத்தில் பிச்சை எடுப்பதைக் காணலாம்.

பாரத் ஜெயின் பரேலியில் வசிக்கிறார் மற்றும் அவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்தனர். பாரத் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒரு ஸ்டேஷனரி கடை நடத்துகிறார்கள். உண்மையில், இது ஒரு அற்புதமான மற்றும் வித்தியாசமான செய்தி .

ஆனால் இது போன்ற பல பணக்கார பிச்சைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் பலரின் தினசரி வருமானம் மிகப்பெரிய தொகை. அதேசமயம் பிச்சை எடுப்பதை பெரும் தொழிலாகப் பார்த்து பலர் பலவிதமான மோசடிகளைக் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிச்சைக்காரர்கள் யார்...! பிச்சை எடுப்பது குற்றமா..?!

'பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என்றும் 'ஈவது விலக்கேல்' என்றும் படித்து வளர்ந்த நமக்கு இந்த வாதம் பொருந்தாது. பிச்சையெடுத்தல் குற்றச்செயல் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ரூ. 500க்கு குழந்தைகளை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சிக்கியதாக தகவல் வெளியானது.

சாலைச் சந்திப்புகள், ரெயில் நிலையங்கள், கோயில்கள், டிராபிக் சிக்னல்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் எதிர்படுபவர்களின் தயவை எதிர்நோக்கி இறைஞ்சும் மனிதர்களுக்கு சமூகம் வைத்திருக்கும் பெயர் பிச்சைக்காரர்கள்.

பிழைப்புக்கு எந்த வழியும் இல்லாமல், பொது இடத்திலும் அலைந்து திரிந்து பிறரிடம் பிச்சை எடுத்தல் மூலம் உயிர்வாழ்கிறார்கள்.

ஆன்மிகப் பாதையில் செல்லும் ஒருவர் தங்கள் வீட்டு வாசலில் வந்து பிச்சை கேட்பதை மக்கள் பெருமையாகக் கருதினர். அதேபோல், அவர்களுக்கு உணவளிப்பது ஒரு பெரிய பாக்கியம். இது பாரம்பரியம் என இந்தியாவில் கருதப்படுகிரது. உண்மையில் பிச்சைக்காரர்கள் அல்லாத பலர் யோக்கியர்கள் போல் வேஷம் போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பிச்சையெடுத்தல் சட்டப்படிக் குற்றமாகும். தமிழ்நாட்டிலும் பிச்சை எடுத்தல் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் 1945-ல் பிச்சையெடுப்பதைத் தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது. அதுபோலவே, நாட்டின் பல பகுதிகளிலும் பிச்சையெடுப்பதற்குத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. பொது இடங்களில் பிச்சை கேட்பது அல்லது பாட்டுப் பாடியோ. நடனமாடியோ, வித்தைகாட்டியோ பணம் பெறுவதையும் மற்றும் ஒரு பொருளைக் கெஞ்சி விற்பதையும் பிச்சை எடுத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் 2013 கீழ் பிச்சையெடுப்பவரை வாரண்டு இல்லாமல் கைது செய்யலாம். விசாரணையின்றி சிறை அல்லது முகாம்களில் அடைக்கும்வகையில் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளது அரசு.

ஆனால் பிச்சை எடுப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என பல மாநில உயர்நீதிமன்றங்கள் தெரிவித்து உள்ளன. அதேசமயம் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களை தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் மாநில அரசு தேவையான சட்டத்தை இயற்றலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story