பெங்களூரு 'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது


பெங்களூரு டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டை அருகே சென்னை-பெங்களூரு ‘டபுள் டக்கர்’ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

பெங்களூரு:

'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரெயில்

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு தினமும் வந்ேத பாரத், சதாப்தி, 'டபுள் டக்கர்' உள்ளிட்ட ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 7.25 மணி அளவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு 'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22625) புறப்பட்டது.

அந்த ரெயில் காலை 11.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் குப்பத்தை தாண்டி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை அருகே பிசநத்தம் ரெயில் நிலைய பகுதியில் வந்து கொண்டிருந்தது.

தடம் புரண்டது

அப்போது ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து 2-வது பெட்டியின் 2 சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. அதனால் அந்த ரெயில் பெட்டி குலுங்கியது. இதனை சுதாரித்து கொண்ட லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் உயிர் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

இதுபற்றி உடனடியாக பெங்களூருவில் உள்ள மூத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு ரெயிலுடன் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணி தீவிரம்

இதையடுத்து தடம்புரண்ட ரெயில் பெட்டி பிரிக்கப்பட்டு பாதிக்கப்படாத முன்பகுதி ரெயில் பயணிகளுடன் பங்காருபேட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைதொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக பெங்களூரு, கண்டோன்மெண்ட், பங்காருபேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளையும், நிலைமையையும் தென்மேற்கு ரெயில்வே பொதுமேலாளர் சஞ்சீவ்குமார் உப்பள்ளியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்து வருகிறார்.

8 ரெயில்கள் சேவையில் மாற்றம்

'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்பட 8 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

* எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (17235) மாலை 5.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று ஒரு மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-குப்பம் 'மெமு' சிறப்பு ரெயில் (06529) குப்பம்-பங்காருபேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பங்காருபேட்டை வரை மட்டுமே இயங்கியது. குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'மெமு' சிறப்பு ரெயில் (06530) குப்பம்-பங்காருபேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பங்காருபேட்டையில் இருந்து இயக்கப்பட்டது.

* ஹவுரா-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (12245) திருப்பத்தூர், ஓமலூர், ஓசூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

* ஜோலார்பேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'மெமு' சிறப்பு ரெயில் (06552) மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்பட்டது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் 'டபுள் டக்கர்' அதிவிரைவு ரெயில் (22626) மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று2 மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு 'மெமு' ரெயில் (06255) இரவு 7 மணிக்கு புறப்படுவதற்ககு பதிலாக நேற்று 2 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்றது.

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் பிருந்தாவன் அதிவிரைவு ரெயில் (12640) மதியம் 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

* பெங்களூரு கண்டோன்மெண்ட்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (08544) கண்டோன்மெண்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக எஸ்.எம்.வி.டி. பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story