உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.38¼ லட்சம் தங்கம் பறிமுதல்; குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது
உப்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38¼ லட்சம் தங்கம் வைத்திருந்த குஜராத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் மர்மநபர்கள் 2 பேர் தங்கங்களை கடத்துவதாக உபநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் தங்க கட்டிகளும், தங்க ஆபரணங்களும் இருந்தது தெரியவந்தது. மேலும் அதற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
இதுகுறித்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தர்சனம் (வயது 36) மற்றும் மானீஷா (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.36 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான 818 கிராம் தங்க கட்டிகளையும், தங்க ஆபரணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.