ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வை தாக்க முயன்றவர் கைது
பெல்தங்கடி அருகே காரை பின்தொடர்ந்து ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வை தாக்க முயன்றவரை போலீசாா் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹரீஷ் பூஞ்சா. இவர் நேற்று முன்தினம் தனது காரில் பண்ட்வாலில் இருந்து பெல்தங்கடி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார். அவரது கார் பண்ட்வால் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரது காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த நபர், தகாத வார்த்தைகளால் திட்டி ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி பண்ட்வால் புறநகர் போலீஸ் நிலையத்தில் ஹரீஷ் பூஞ்சா எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்னிர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்(வயது 38) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் இல்லை என்றும், அவர் எதற்காக எம்.எல்.ஏ.வை தாக்க முயன்றார் என்று விசாரித்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் சோனவானே கூறியுள்ளார்.