வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x

கர்நாடகத்தில் வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

24 மணி நேரமும் கண்காணிப்பு

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து பெரும்பாலும் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் 4 இடங்கள் உள்பட ஒட்டு மொத்தமாக 34 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

34 வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாளை (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அங்கு வாக்கு எண்ண தேவையான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுழற்சி முறையில் பாதுகாப்பு

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். தற்போது தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 34 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. தற்போது 34 மையங்களிலும் 24 மணிநேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 'ஷிப்ட்' அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

87 கம்பெனி மத்திய படைவீரர்கள்

ஒரு ஷிப்ட்டில் ஒரு இன்ஸ்பெக்டர் பொறுப்பில் மற்ற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவருடன் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

வருகிற 13-ந் தேதி(நாளை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமும் அமைதியான முறையில் ஓட்டு எண்ணிக்கை நடை

பெறுவதற்கான முன் எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கைக்காக 34 மையங்களிலும் 87 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைவீரர்கள், எல்லை பாதுகாப்பு படைவீரர்கள், அதிவிரைவுப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீஸ்காரர்கள், அந்தந்த மாவட்ட மற்றும் அப்பகுதி போலீசாரும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுக ாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்று(நேற்று முன்தினம்) வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், இரவு 11 மணிக்குள் வந்து விட்டது. 11 மணியில் இருந்து வருகிற 13-ந் தேதி (நாளை) ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தாய் இறந்த நிலையிலும் தேர்தல்

பணியாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதாவது ஓட்டுப்பதிவு அன்று அவரது தாய் சங்கரவ்வா(வயது 80) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் போலீஸ்காரர் அசோக், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் தனது தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு உடனே புறப்பட்டு தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த கதக்கில் உள்ள ஜி.டி. வாக்குச்சாவடியில் பணியில் இணைந்தார். தாய் இறந்த நிலையிலும், தேர்தல் பணியாற்றி கடமையை நிறைவேற்றிய போலீஸ்காரர் அசோக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.பி.ஜி. அலோக்குமார், வாக்குப்பதிவின் போது போலீஸ்காரர் அசோக், தனது தாய் உயிர் இழந்திருந்தாலும், தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் பணி பாராட்டத்தக்கது என்று கூறினார்.


Next Story