"மத்திய அரசால் அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்க முடியாது"- ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்


மத்திய அரசால் அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்க முடியாது-  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்
x

Image Courtesy: PTI 

2024 மக்களவைத் தேர்தல் மோடி வெர்சஸ் அரவிந்த் கெஜ்ரிவால் என்பதை நோக்கி நகர்வதாக சஞ்சய் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா உள்ளார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் இன்று கூறுகையில்,மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதைத் தடுப்பதில் மத்திய அரசு வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மோடி வெர்சஸ் அரவிந்த் கெஜ்ரிவால் என்பதை நோக்கி நகர்கிறது. உங்களால் கெஜ்ரிவாலை தடுக்க முடியாது என்று நான் மீண்டும் சொல்கிறேன்.

நீங்கள் எங்கள் சுகாதார மந்திரியையோ அல்லது கல்வி மந்திரியையோ கைது செய்யலாம், ஆனால் டெல்லியின் எந்த வேலையும் நிறுத்தப்படாது.

நீங்கள் கெஜ்ரிவாலையும் ஆம் ஆத்மி கட்சியையும் குறிவைக்க விரும்பினால், அதைச் செய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை உலகில் நம்பர் 1 ஆக்கும் எங்கள் பணி இந்த நடவடிக்கைகளுடன் நின்றுவிடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story