வழக்குகளை விசாரிக்க கிராம கோர்ட்டுகள் அமைக்க ஆலோசனை-முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
கிராமங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க கிராம கோர்ட்டுகள் அமைக்க ஆலோசனை நடத்தி வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:-
கிராம சுவராஜ்ஜியம்
கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் மகாத்மா காந்தி விருது வழங்கும் விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, மகாத்மா காந்தி விருதுகளை வழங்கி பேசியதாவது:-
அதிகார பரவலாக்கல் காந்தியின் கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகி வருகிறது. இதன் மூலம் மட்டுமே ஜனநாயகம் வெற்றி பெறும், நாடும் வளரும். அதனால் தான் அவர் கிராம சுவராஜ்ஜியத்தை வலியுறுத்தினார். கிராமங்கள் வளராமல் நாடு வளர்ச்சி அடைய முடியாது என்று காந்தி நம்பினார். காந்தின் விருப்பப்படி பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அதிகார பரவலாக்கல் திட்டத்தை அமல்படுத்தினார். இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்தார்.
கிராம கோர்ட்டுகள்
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வந்ததற்கு ராஜீவ்காந்தி தான் காரணம். மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தாக மத்திய பா.ஜனதா சொல்கிறது. இந்த விஷயத்தை முதலில் கையில் எடுத்ததே காங்கிரஸ் தான். தற்போது பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
கிராமங்களின் வழக்குகளில் கிராமங்களிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்று காந்தி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி கர்நாடகத்தில் கிராம கோர்ட்டுகள் அமைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கிராம கோர்ட்டுகள் அமைக்கப்பட்டால் அது கிராமப்புற மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். கைத்தறி ஆடைகள் தயாரிக்கும் பகுதிகள் மேம்படுத்தப்படும். அந்த கைத்தறி பொருட்களுக்கு தேவையான சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே, மேல்-சபை கொறடா சலீம் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.