அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கினை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தால் நாளை விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 23-ந்தேதி விசாரித்தது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆனால் எவ்வித முடிவையும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் சார்பில் வக்கீல் வினோத் கண்ணா, பெஞ்சமின் சார்பில் வக்கீல் தீக்ஷாராய் ஆகிய இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
விரைந்து விசாரிக்க...
மேலும் இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறைக்கால அமர்வு முன் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி முறையிட்டார்.
இதற்கு நீதிபதிகள், 'பொதுவாக கோடை கால விடுமுறை அமர்வு இது போன்ற முறையீடுகளை ஏற்று விசாரிப்பதில்லை' என தெரிவித்தனர்.
நாளை விசாரணை
இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரிக்கிறது. எனவே மேல்முறையீட்டு மனுவை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மீண்டும் முறையிட்டார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் கவுதம் சிவசங்கர் ஆட்சேபம் தெரிவித்து, இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை. கோடைகால விடுமுறை நிறைவடைந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியின் மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.