டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மோதல் - நாள் முழுவதும் ஒத்திவைப்பு


டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மோதல் - நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x

டெல்லி சட்டசபையில், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக (ஆபரேஷன் லோட்டஸ்) மத்திய பா.ஜனதா அரசு மீது முதல்-மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முக்கியமாக, கலால் கொள்கை விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கில் சிக்கியுள்ள துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, தான் ஆம் ஆத்மியை விட்டு விலகினால் தன் மீதான வழக்குகளை வாபஸ் பெறலாம் என பா.ஜனதா கூறியதாக ஏற்கனவே அம்பலப்படுத்தி இருந்தார். இதைப்போல பல எம்.எல்.ஏ.க்களை அச்சுறுத்தியும், பணம் கொடுத்தும் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி இருந்தது. எம்.எல்.எ.க்களுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை மறுத்த பா.ஜனதாவினர், கட்சி மாறுவதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க முன் வந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கூறியது. அத்துடன் இந்த குற்றச்சாட்டை கூறும் எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பா.ஜனதாவினர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.

இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் பெரும் புயலை கிளப்பியது. நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்துக்காக காலையில் அவை கூடியதும் பா.ஜனதா எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா எழுந்து, வகுப்பறைகள் கட்டியதில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக தான் அளித்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவை கேட்டுக்கொண்டார்.

அப்போது பா.ஜனதாவினரின் ஆபரேஷன் லோட்டஸ் பிரச்சினையை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி எழுப்ப முயன்றார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சட்டசபை 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோது பேசிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி, ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் டெல்லியில் ஆட்சியை மாற்றியமைக்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டுதல், அவர்களை கொள்ளையிட்டு செல்லுதல் ஆகிய 3 வழிகளில் ஆபரேஷன் லோட்டஸ் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுவதற்கு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.20 கோடி பேரம் பேசப்படுவதாகவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும் ஜனநாயகம் இதுதானா? என்றும் கேள்வி எழுப்பிய அவர், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரேதசம், கோவா, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இவ்வாறுதான் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய மற்றொரு எம்.எல்.ஏ. துர்கேஷ் பதக், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்தார். குல்தீப் குமார் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., பா.ஜனதாவின் ரூ.20 கோடி பேரத்தை ஏற்க மறுத்ததால், போலி வழக்கில் தன்னை சிறைக்கு அனுப்புவோம் என பா.ஜனதாவினர் மிரட்டுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ஆபரேஷன் லோட்டஸ் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை கேட்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 'ஆபரேஷன் லோட்டஸ்' தொடர்பாக விசாரணை நடத்துமாறு மனு கொடுப்பதற்காக சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு ஆம் ஆத்மி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாலையில் சென்றனர். ஆனால் அவர்களை அதிகாரிகள் சந்திக்கவில்லை. இதைத்தொடர்ந்து அலுவலகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு ஏற்கனவே மனு அனுப்பியும் சி.பி.ஐ. இயக்குனர் சந்திக்க மறுப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், இதன் மூலம் பா.ஜனதாவின் கட்டளைப்படி சி.பி.ஐ. செயல்படுவது உறுதியாகிறது என்றும் தெரிவித்தனர்.


Next Story