ஆனேக்கல்லில் பயங்கரம் காதலியை கொன்று தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
ஆனேக்கல் அருகே காதலியை கொலை செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனேக்கல்:
காதல்
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா அக்கிகொப்பலு சவுடசமுத்திராவை சேர்ந்தவர் நேத்ராவதி. அதேபகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். இருவரும் கல்லூரி படிக்கும்போதே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா கெப்பகோடி வந்த நேத்ராவதி தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். அங்கு மல்லிகார்ஜூன் அடிக்கடி சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேத்ராவதியின் வீட்டிற்கு சென்ற மல்லிகார்ஜூன் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மல்லிகார்ஜூன் நேத்ராவதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மல்லிகார்ஜூன், பயத்தில் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நேத்ராவதி வேலைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் எடுக்கப்படவில்ைல. இதையடுத்து கெப்பகோடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு இருவரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் காதலை முறித்ததால் நேதிராவதியை கொன்று மல்லிகார்ஜூன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.