பிட்காயின் முறைகேடு பற்றி விரிவான விசாரணை-மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
பிட்காயின் முறைகேடு பற்றி ஆழமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை நடப்பதாக மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
3-வது முதல்-மந்திரி பதவி...
பா.ஜனதா ஆட்சியில் பிட்காயின் முறைகேடு பெரிய அளவில் நடந்திருந்தது. இந்த முறைகேட்டில் சிக்கிய ஸ்ரீகிருஷ்ணாவை பல்வேறு முறைகேடுகளுக்காக கடந்த ஆட்சியில் பயன்படுத்தி இருந்தனர். தற்போது பிட்காயின் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு மூலமாக இது வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் போது பிட்காயின் முறைகேடு, கடந்த பா.ஜனதா ஆட்சியின் வண்ணம் ஆகியவை வெளியே வரும்.
பா.ஜனதா ஆட்சியின் போதே பிட்காயின் முறைகேடு குறித்து பாரபட்சம் இன்றி விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. அப்போது நியாயமான விசாரணை நடைபெறவில்லை. அவ்வாறு நியாயமான முறையில் விசாரணை நடந்திருந்தால் பா.ஜனதா ஆட்சியில் 3-வது முதல்-மந்திரி பதவி ஏற்றிருப்பார். இதன் காரணமாக தான் பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
4 பேரை இழுத்து பார்க்கட்டும்
பிட்காயின் முறைகேடு பற்றி மிகவும் ஆழமாகவும், பல்வேறு தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை நடக்கிறது. சைபர் கிரைம் மற்றும் தொழில் நுட்பத்தில் திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகளால் மட்டுமே விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வர முடியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 45 பேரை பா.ஜனதாவுக்கு இழுப்பதாக பி.எல்.சந்தோஷ் கூறி இருக்கிறார். அவரால் முடிந்தால் முதலில் 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுத்து பார்க்கட்டும்.
பி.எல்.சந்தோஷ் பேசி இருப்பது ஆபரேஷன் தாமரைக்கு ஒரு முன் உதாரணம் ஆகும். மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் ஆபரேஷன் தாமரை மூலமாக இழுக்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் வருகிறது. அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.