டெங்கு வைரசை சுமக்கும் கொசு கடித்தால் மரணம் நேரிடும்; உதயநிதி பேச்சுக்கு மத்திய பிரதேச சாமியார் எச்சரிக்கை


டெங்கு வைரசை சுமக்கும் கொசு கடித்தால் மரணம் நேரிடும்; உதயநிதி பேச்சுக்கு மத்திய பிரதேச சாமியார் எச்சரிக்கை
x

டெங்கு வைரசை சுமக்கும் கொசு கடித்தால் மரணம் நேரிடும் என சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சுக்கு மத்திய பிரதேச சாமியார் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

உஜ்ஜைன்,

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டு படிக்கட்டை தாண்ட கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்" என்று பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மகாமண்டலேஷ்வர் சாமியாரான சாந்தி ஸ்வரூபானந்த் இன்று கூறும்போது, சனாதன தர்மம் மிக பழமையான காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. அது ஒருபோதும் மறைந்து விடாது. ஒருவரும் அதனை அழிக்க முடியாது.

நம்முடைய நாட்டின் மீது பலர் படையெடுத்து உள்ளனர். பல ஆண்டுகளாக நாம் அடிமைகளாக வைக்கப்பட்டோம். நம்முடைய கலாசாரம் அழிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சனாதன தர்மாவை அழிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

டெங்கு மற்றும் மலேரியா போன்றது சனாதன தர்மம் என கூறும் தி.மு.க. மந்திரி (உதயநிதி), எவரையேனும், டெங்கு வைரசை சுமந்து செல்லும் கொசு கடித்தால் மரணம் நேரிடும் என நினைவில் கொள்ள வேண்டும்.

சனாதன தர்மம் பின்பற்றும் நபர்களின் பொறுமை மற்றும் சகிப்பு தன்மையை சோதிக்க கூடாது. அதற்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக சனாதன தர்மம் பின்பற்றுவோர் பொங்கியெழ கூடிய நாளில், அவர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வந்து வாக்கு கேட்கவே முடியாத அளவுக்கு கடினம் ஆகிவிடும்.

அதனால், அரசியல்வாதிகள் அவர்களுடைய எல்லைக்குள் இருக்க வேண்டும். மதம் பற்றி இதுபோன்ற விமர்சனங்களை வெளியிட கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார். பிற மதம் எதனையாவது பற்றி அவர் இதுபோன்று கூறினால், அவருக்கு எதிராக பத்வாக்கள் பிறப்பிக்கப்படும்.

சனாதன தர்மம் பின்பற்றுபவர்கள், அவர்களை தூண்டி விடாத வரையிலும் சகிப்பு தன்மை, சுதந்திரம் மற்றும் அகிம்சை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்துக்கள் போராட தொடங்கும் நாளில், அவருடைய அரசியல் வாழ்வு முடிந்து விடும் என அவர் கூறியுள்ளார்.


Next Story