அசுத்த நீர் குடித்த 10 வயது சிறுமி சாவு


அசுத்த நீர் குடித்த 10 வயது சிறுமி சாவு
x

சிக்பள்ளாப்பூர் அருகே அசுத்த நீர் சிறுமி உயிரிழந்தாள். இதனால் கோபமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்பள்ளாப்பூர்:-

சிறுமி சாவு

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா தொண்டேபாவி கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட சிக்க ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா, ஜெயலட்சுமி தம்பதி. இவர்களது மகள் பாவனா (வயது 10). சிக்கஒசஹள்ளி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் எந்திரம் பழுதானது.

இதனால் கிராமத்திற்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமி பாவனா அசுத்தம் கலந்த நீரை குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த பெற்றோர் சிறுமியை கவுரிபித்தனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். விசாரணையில் அசுத்த நீரை குடித்ததால் சிறுமி பலியானது தெரிந்தது. இதனால் கோபமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராம பஞ்சாயத்து எதிராக போராட்டம் நடத்தினர்.

தாசில்தார் ஆய்வு

இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராம பஞ்சாயத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாசில்தார் மகேஷ் எஸ்.பத்ரி வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை கேட்ட போராட்டகாரர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற தாசில்தார், குடிநீர் மாதிரியை சேகரித்து, ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆய்வு அறிக்கை வந்தபின்னர்தான், உண்மை காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இதற்கிடையில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளை அழைத்த தாசில்தார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும்படி உத்தரவிட்டார். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவம் குறித்து கவுரிபித்தனூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story