கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும்; மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
கர்நாடகத்தில் 6 மாதங்களில் 6,500 ‘ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி முதல்வர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் உயர்கல்வித்துறையில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றபடி கல்லூரிகளில் தரமான கல்வியை கற்பிக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் 2,500 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி பாடங்களை நடத்த முடியும். அடுத்த 6 மாதங்களில் 6,500 வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றி அமைக்கப்படும்.
கற்றலை தீவிரமாக மாற்றும் வகையில் கற்றல் நிர்வாக முறையை அமல்படுத்தியுள்ளோம். இதில் பாடங்கள் மற்றும் விஷயங்களை மாணவர்கள் 100-க்கு 100 சதவீதம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது 84 அரசு கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள்.
105 கல்லூரிகளில் மொத்த இடங்களில் 40 சதவீதம் மட்டுமே பூர்த்தியுள்ளது. ஒரு கல்லூரியில் குறைந்தது 1,500 மாணவர்கள் பயில வேண்டும். அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஏழை மற்றும் நடுநிலை குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தரமான கல்வியை வழங்க முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.