பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக 6,000 துப்புரவு தொழிலாளர்கள் நியமனம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக 6,000 துப்புரவு தொழிலாளர்கள் நியமனம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை.

பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக 6,000 துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

பாதாள சாக்கடை

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நகர வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நகர வளர்ச்சி மந்திரி பைரதி பசவராஜ், நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கர்நாடகத்தில் 291 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. டெண்டர் விடும் பணிகளும் தொடங்கியுள்ளன. ரூ.3,885 கோடி மதிப்பீட்டிலான பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். மத்திய அரசின் அம்ருத் நகர 2.0 திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் கர்நாடக அரசின் பங்கும் சேர்த்து ரூ.9,260 கோடியில் 287 நகரங்களில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஒருங்கிணைந்த நகரங்கள்

முதல்கட்டமாக தொழில்நுட்ப ரீதியாக சாதகமாக உள்ள நகரங்களில் இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நகரங்களில் ஏழை மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்காக விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக 6,000 துப்புரவு தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த பணி நியமனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2,000 படி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தேன். இந்த ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும். இதற்காக வளர்ச்சி கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர்

இந்த திட்டத்திற்கு உடனே ஒரு ஆலோசகரை நியமித்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த நகரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story