திருட்டு வழக்குகளில் 5 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.50½ லட்சம் மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன.
பெங்களூரு-
3 பேர் கைது
பெங்களூரு உளிமாவு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாந்திநிகேதன் லே-அவுட்டில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பதி வெளியே சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பின்கதவை உடைத்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கநகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் உளிமாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் தம்பதி வீட்டில் திருடியதாக பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசித்து வரும் ஜப்பான் ராஜா என்கிற ராஜா, வினோத், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரை கிலோ தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன. அதன்மதிப்பு ரூ.27 லட்சத்து 46 ஆயிரம் ஆகும்.
ரூ.50.46 லட்சம் மதிப்பு
இதுபோல எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஆந்திராவை சேர்ந்த அருண் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8½ லட்சம் மதிப்பிலான 178 கிராம் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.
இதுபோல மடிவாளா போலீசாரும் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.14½ லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக கைதானவர்களிடம் இருந்து ரூ.50 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.