ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2023 10:00 AM IST (Updated: 1 April 2023 10:08 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மங்களூரு-

மங்களூருவில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தொழில் அதிபர்

மைசூரு டவுன் விஜயநகர் வாணிவிலாஸ் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரா (வயது 50). தொழில்அதிபர். இவரது மனைவி நிர்மலா (45). இந்த தம்பதியின் மகள்கள் சைத்ரா (9), சைதன்யா (9). இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி தேவேந்திரா தனது மனைவி மற்றும் மகள்களுடன் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு வந்தார்.

மங்களூரு கே.எஸ்.ராவ் ரோட்டில் உள்ள கருணா தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர். முதலில் ஒருநாள் அவர்கள் அறையை பதிவு செய்தனர். பின்னர் மேலும் 2 நாட்கள் அறையை பதிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் அறையை காலி செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை.

பிணமாக கிடந்தனர்

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நேற்று காலை அறைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கதவு திறக்கப்படவில்லை. வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் ஊழியர்கள் ஜன்னல் கதவு வழியாக பார்த்தனர். அப்போது, அறைக்குள் தேவேந்திரா தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்ற 3 பேரும் படுக்கையிலும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் பர்கி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால்...

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நிர்மலா மற்றும் அவரது இரட்டை குழந்தைகளான சைத்ரா, சைதன்யா ஆகியோர் விஷம் குடித்து கொன்றுவிட்டு தேவேந்திரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதற்கிடையே அந்த அறையில் இருந்து தேவேந்திரா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில், கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மைசூருவில் உள்ள உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின், தனியார் தங்கும் விடுதிக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து பர்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story