‘பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்” மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்


‘பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்” மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்
x
தினத்தந்தி 13 July 2019 3:42 AM IST (Updated: 13 July 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவையில் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பது பற்றி எடுத்துக்கூறிய அவர், அதற் கான திட்டங்கள் தீட்டாமல் இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

சுமார் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பது குறித்து விவாதத்தின்போது, ப.சிதம்பரம் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு 5 ஆண்டிலும் நாட்டின் பொருளாதாரம் இரு மடங்கு ஆகும் என்பதை பணம் கடன் கொடுப்பவர் கூட சொல்லிவிடுவார். இது இயல்பானது; இது எளிமையான கணக்கீடு” என குறிப்பிட்டார்.

இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறும்போது, “அப்படியென்றால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதாரத்தின் மீது ஏன் கவனம் செலுத்தவில்லை? அப்போது ஊழல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. எல்லா கவனமும் அதன் மீதுதான் இருந்தது. பொருளாதாரம்தான் தானாக இரு மடங்காகிவிடும், நாங்கள் எங்களுக்கு எது தேவையோ அதை செய்வதில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் சொந்த வருமானத்தை பெருக்கிக்கொள்கிறோம் என்று இருந்துவிட்டார்களா, ஆமாம், முன்னாள் நிதி மந்திரி எதை குறிப்பிட முயற்சிக்கிறார்?” என கேட்டார்.

தொடர்ந்து அவர், “ஒவ்வொரு முன்னாள் நிதி மந்திரியிடம் இருந்தும் நான் நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள விரும்புவது உண்டு” என கூறியதுடன், ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது ஏற்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை தாங்கள் சரியாக கையாண்டதாக தெரிவித்தார்.

அந்த வகையில், உயர் பண வீக்கத்தை கட்டுப்படுத்தியதாகவும், வருமானத்தை தானாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தில் திருத்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்ததாகவும் அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பதில் அளித்தபோது, “லைசென்ஸ் ராஜ்யம் ஒழிக்கப்பட்டது உள்பட 4 சீர்திருத்தங்களை மட்டுமே முன்னாள் நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் நாங்கள் 16-ஐ பட்டியலிட்டிருக்கிறோம். நாங்கள் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் சரக்கு மற்றும் சேவை வரிமுறையை கொண்டு வந்தது ஆகும். அது கட்டமைப்பு சீர்திருத்தம் இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.

வரி இலக்குகள் எட்ட முடியாதவை என ப.சிதம்பரம் குறிப்பிட்டதையும் நிர்மலா சீதாராமன் மறுத்தார். வருமான வரி, உற்பத்தி வரி, சரக்கு மற்றும் சேவை வரி இலக்குகள் எட்டி விடக்கூடியவை தான் என புள்ளிவிவரங்களுடன் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.

Next Story