கேரளாவின் மாநில பழம் பலாப்பழம்: சட்டப்பேரவையில் அறிவிப்பு
கேரள சட்டப்பேரவையில் மாநில பழம் ஆக பலாப்பழம் அதிகாரப்பூர்வ முறையில் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #KeralaAssembly
திருவனந்தபுரம்,
கேரள சட்டப்பேரவையில் வேளாண் துறை மந்திரி வி.எஸ். சுனில் குமார் இன்று அதிகாரப்பூர்வ முறையில் பலாப்பழத்தினை மாநில பழம் ஆக அறிவித்துள்ளார்.
கேரளாவில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி பலாப்பழங்கள் விளைகின்றன. அவற்றில் 30 சதவீதம் அளவிற்கு வீணாகிறது. கேரள பலாப்பழம் என இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தும் நோக்குடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பதற்கும் உதவும்.
அதனுடன் பலாப்பழம் மற்றும் அதன் உபபொருட்கள் விற்பனையால் மொத்தம் ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேதி உரம் அல்லது பூச்சிக்கொல்லிகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இயற்கை முறையில் உருவாகும் கேரள பலாப்பழம் அதிக சத்து மற்றும் சுவையை கொண்டிருக்கும்.
அதனால் பொதுமக்களுக்கு பலாப்பழ கன்றுகளை விநியோகித்து வீட்டின் பின்புறம் வளர்க்க செய்து விளைச்சலை அதிகரிக்க செய்யும் திட்டங்களும் உள்ளன என அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் மாநில விலங்காக யானை, பறவையாக கிரேட் ஹார்ன்பில் மற்றும் மலராக கன்னிகோனா அறிவிக்கப்பட்டு உள்ளது. கரிமீன் மாநில மீன் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில பழம் ஆக பலாப்பழம் இன்று கேரள சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.