கர்நாடக சட்டசபை தேர்தலில் 1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள், 90 ஆயிரம் மெழுகுகள் பயன்பாடு
கர்நாடக சட்டசபை தேர்தலில் 1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள், 90 ஆயிரம் மெழுகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மைசூரு பெயிண்ட் அன்ட் வார்னீஷ் நிறுவனம் தயாரித்தது.
மைசூரு:
மைசூரு பெயிண்ட்ஸ் நிறுவனம்
நாட்டின் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் அழியாத மை மைசூருவில் தயாரிக்கப்படுகிறது. மைசூருவில் உள்ள மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதற்கான அடையாள மையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 1937-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட கிருஷ்ணதேவராஜ உடையாரால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 1962-ம் ஆண்டு முதல் நாட்டில் அனைத்து தேர்தல்களிலும் மைசூருவில் தயாரிக்கப்படும் இந்த மை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் கமிஷன் வாக்களித்தவர்களின் விரலில் அழியாத மையிட்டு வருகிறது. அன்று முதல் தேர்தல் கமிஷன், அடையாள மையை தயாரிக்கும் பணியை ஒப்பந்தம் அடிப்படையில் மைசூரு பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.
அழியாத மை
அப்போது முதல் இப்போது வரை நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கும் இங்கிருந்து தான் அழியாத மையை தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. ஜனநாயக கடமையான ஓட்டளிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மை எந்தவகையான பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சிலர் இந்த மை தயாரிக்க சில்வர் நைட்ரேட் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. கடந்த 1962-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் வகுத்துகொடுத்த பார்முலா படி ரசாயனம் மற்றும் வண்ண கலவை பயன்படுத்தி மை தயாரிக்கிறோம் என்று மைசூரு பெயின்ட் அன்ட் வார்னீஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
1.30 லட்சம் மை பாட்டில்கள்
இந்த மையை விரலில் வைத்த 30 வினாடிகளில் இதன் நிறம் கருமையாக மாறுவது இதன் சிறப்பு. ஒரு முறை விரல்களில் இந்த மையை வைத்துவிட்டால் அதனை அழிப்பது கடினம். இன்று நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் மை பாட்டில்களை தயாரித்துள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக சீல் வைக்க 90 ஆயிரம் மெழுகுகளையும் தேர்தல் ஆணையத்திற்கு இந்த நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளளோம்.
தற்போது ஒரு மை பாட்டில் ரூ.164-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 30 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மையை தேர்தலுக்கு முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பு தான் தயாரிக்க உள்ளோம். இ்ந்த மை 6 மாதத்திற்குள் காலாவதி ஆகிவிடும்.
30 நாடுகளுக்கு ஏற்றுமதி
இந்த மை இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, கம்போடியா, தென் ஆப்பிரிக்கா, மாலத்தீவு, துருக்கி, நேபாளம், ஆப்கானிஸ்தான், நைஜிரீயா, கானா, பப்புவா நியூ கினியா, டோகா, சியரா லியோன் உள்ளிட்ட ஆசிய கண்டத்தில் உள்ள 30 நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் தேர்தல்களிலும் இந்த மை பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.