புதுச்சேரியிலும் வெளியானது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி,
10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார்7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.
அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.
இந்நிலையில் புதுச்சேரியிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
இதன்படி புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் புதுச்சேரி அரசு பள்ளிகளில் 91.96 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகிறது.