இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ.50 ஆயிரம் வழங்கிய யாசகர்


இலங்கை தமிழர்களுக்கு உதவ  ரூ.50 ஆயிரம் வழங்கிய யாசகர்
x
தினத்தந்தி 5 May 2022 3:13 AM IST (Updated: 5 May 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தமிழர்களுக்கு உதவ ரூ.50 ஆயிரம் யாசகர் பூல்பாண்டி வழங்கினார்.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது50). இவர் யாசகம் எடுத்து தனது பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மதுரைக்கு வந்்தார். ஆனால் கொரோனா காரணமாக அப்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் அவரால் தூத்துக்குடி செல்ல முடியவில்லை. இதனால் மதுரையிலேயே தங்கி விட்டார். அப்போது யாசகம் எடுத்து கொரோனா நிவாரண நிதியாக கலெக்டரிடம் நிதி கொடுத்து வந்தார். 35 முறை கொரோனா நிதியாக தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கினார். அதன்பின் 16 முறை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நிதி தந்தார். ஆக மொத்தம் 51 முறை ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் பூல்பாண்டி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் 52-வது முறையாக தற்போது ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார். 
இது குறித்து பூல்பாண்டி கூறும் போது, “முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக நிதி வழங்கலாம் என்று இருந்தேன். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இந்த முறை பொதுமக்களிடம் இருந்து யாசகம் பெற்று ரூ.50 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். இது இலங்கை தமிழர்களுக்கு சென்றடைய வேண்டும்” என்றார். அவரை அதிகாரிகள் உள்பட பலர் பாராட்டினர்.


Next Story