தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள்: ஆணைய நிர்வாக இயக்குனர் ஆய்வு

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து புதுடெல்லி விமான நிலைய ஆணைய நிர்வாக இயக்குனர் (பொறியியல் பிரிவு) சஞ்சீவ் ஜிந்தால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து புதுடெல்லி விமான நிலைய ஆணைய நிர்வாக இயக்குனர் (பொறியியல் பிரிவு) சஞ்சீவ் ஜிந்தால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு
தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய விமான நிலைய ஆணைய பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஜிந்தால் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு வந்தார். அவர் விமான நிலைய பயணிகள் முனையம், ஓடுதளம் விரிவாக்கம் மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீயணைப்பு வார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மீட்பு உபகரணங்கள் அனைத்தும் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
நடவடிக்கை
பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் என்.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது, விமான நிலையத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளும் சரியான முறையில் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டு வருகிறது. கட்டுமானம் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகளில் 25 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மேலும் பணிகளை விரைவு படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தேவையான 600.97 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு விமான நிலைய ஆணையத்திடம் வழங்கி உள்ளது. மேலும் கூடுதலாக தேவைப்படுகிற 96.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களில் அந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது. 11 கிலோ மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. விமான ஓடுதளம் விரிவாக்கம் மற்றும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.
தொடர்ந்து நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஜிந்தால் கூறும் போது, திட்டத்தை செயல்படுத்தும் போது மழைநீர் வடிகால் அமைத்தல், எலக்ட்ரிக்கல் பணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் பெற வேண்டிய அனுமதிகள் உள்ளிட்ட சவால்களை ஒப்பந்ததாரர்கள், விமானநிலைய ஆணைய திட்ட பொறியாளர்கள் இணைந்து செயல்படுத்த வேண்டும். உயர் அழுத்த மின்சார ஒயர்களை அப்புறப்படுத்துதல், நீர் ஆதாரத்தை பெருக்குதல் போன்றவற்றில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வெற்றிகரமாக இலக்கை அடைவதற்கு பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்களையும் கூறினார். இந்த பணிகளை 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story