திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது
திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்
திருவாரூர்
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூரில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில் காலை 10.30 மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. இதனையடுத்து காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
இதனால, திருவாரூர் கடைவீதி, நகைக்கடை சந்து சாலை மற்றும் உள்ள சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிய வடிகால் வசதி இல்லாததால் வெள்ளமென மழைநீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் நேதாஜி சாலை, தெற்கு வீதி மற்றும் பழைய பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் சாலைகளில் குளம்போல மழைநீர் தேங்கி நின்றது. இதில் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் நடந்து சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ரெயில்வே கீழ்பாலத்திலும் மழைநீர் தேங்கியது.
திருவாரூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருவதால் மழை நீர் வடிய வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதனையடுத்து மின் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தண்ணீர் புகுந்தது
பலத்த மழையினால் திருவாரூர் தியாகராஜர் கோவில் 2-வது பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் அங்குள்ள கிழக்கு கோபுர வாசல் மேல்கரை, மேற்கு கோபுர வாசல் சன்னதி தெரு போன்ற இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனையடுத்து கோவிலுக்குள் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் மதியத்திற்கு பிறகு விடுமுறை அளித்தன.
Related Tags :
Next Story