பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்ய கொடைக்கானலுக்கு வந்த வியாபாரி


பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்ய கொடைக்கானலுக்கு வந்த வியாபாரி
x
தினத்தந்தி 12 Feb 2022 10:49 PM IST (Updated: 12 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்ய கொடைக்கானலுக்கு வந்த சென்னை வியாபாரியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

கொடைக்கானல்:
பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்ய கொடைக்கானலுக்கு வந்த சென்னை வியாபாரியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சுற்றுலா பயணிகள்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக பிரையண்ட் பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், கொடைக்கானலுக்கு நேற்று மாலை சுற்றுலா வந்தார். வட்டக்கானல் அருகே டால்பின் நோஸ் பகுதிக்கு சென்ற அவர் திடீரென்று அங்குள்ள பாறையில் அங்கும்  இங்குமாக சுற்றித்திரிந்தார். திடீரென அவர் அங்குள்ள பாறையின் இடுக்கில் படுத்துக்கொண்டார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த வியாபாரி சாதிக் பாட்சா (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் அவர், கடந்த சில வாரங்களாகவே குடும்ப பிரச்சினையால் வேதனையில் இருந்து வந்தார்.
தற்கொலை செய்ய...
இதற்கிடையே கொடைக்கானல் அருகே தடை செய்யப்பட்ட வனப்பகுதியான வட்டக்கானல் ரெட்ராக் பகுதியில் கடந்த வாரம் மதுரையை சேர்ந்த ராம்குமார் தனது செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது பள்ளத்தில் தவறி விழுந்தார். சுமார் 1,500 அடி பள்ளத்தில் விழுந்த அவர், 8 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த செய்தியை அறிந்த சாதிக் பாட்சா, அதுபோன்று பள்ளத்தில் குதித்து தானும் தற்கொலை செய்யும் முடிவில் கொடைக்கானலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் ரெட்ராக் பகுதிக்கு வழி தெரியாமல், டால்பின் நோஸ் பகுதிக்கு வந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்ததுடன், சாதிக் பாட்சாவை எச்சரிக்கை செய்து காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story