குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது


குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 15 Nov 2021 1:54 AM IST (Updated: 15 Nov 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பரவலாக மழை

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், மணிமுத்தாறு, செங்கோட்டை, களக்காடு, சங்கரன்கோவில், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று அதிகாலையில் சாரல் மழை தூறியது. பின்னர் வெயில் அடித்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் 138.40 அடி தண்ணீர் உள்ளது. அந்த அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 8 ஆயிரத்து 214 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 392 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர்திறப்பு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாபநாசம் காரையாறில் காணி இன மக்கள் அமைத்துள்ள தொங்கு பாலத்தை தொட்டவாறு வெள்ளம் ஓடுகிறது. கோவில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. அகஸ்தியர் அருவி, கல்யாணதீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் அருவிகள் தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அணைகள் நீர்மட்டம்

இதேபோன்று சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.96 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 87.90 அடியாகவும், கடனாநதி 83 அடியாகவும், ராமநதி 81.50 அடியாகவும், கொடுமுடியாறு 52.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு 23 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 21.64 அடியாகவும் உள்ளது. இதுதவிர மற்ற அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கடனாநதி நிரம்பியதால் அங்கு வருகின்ற 695 கனஅடி தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்படுகிறது. கருப்பாநதி அணை, கடனாநதி, குண்டாறு, ராமநதி அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பின. இதனால் அணைகளுக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சுடலை மாடசாமி, கருப்பசாமி உள்ளிட்ட கோவில் சிலைகளை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சிற்றாற்றில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வீணாக கடலுக்கு செல்கிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரைகளில் செல்பி எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழையின் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் குடை பிடித்தவாறு வெளியில் சென்று வந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடிமாறு அணைப்பகுதியில் 70 மில்லி மீட்டர் மழையும், தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 44 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அனுமன் நதிக்கு குறுக்கே 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து முழுக் கொள்ளளவை கடந்த மாதமே எட்டியது. அதன்பின் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், வடகரை, ஆய்க்குடி, கம்பிளி, சாம்பவர் வடகரை, சுரண்டை உள்பட 18 கிராமங்களில் உள்ள 43 குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பியது.
தற்போது நேற்று காலை முதல் பெய்த மழையால் மீண்டும் அணை நிரம்பி வழியத் தொடங்கியது. இதனால் கால்வாய் கரையோரம் குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
அடவிநயினார்-44, ராதாபுரம்-52.30, ஆய்க்குடி- 23, அம்பை-17, மூலைக்கரைப்பட்டி-8, சேரன்மாதேவி-12, சேர்வலாறு-28, பாபநாசம்-41, தென்காசி-18, மணிமுத்தாறு-21, பாளையங்கோட்டை-7, கொடுமுடியாறு-70, செங்கோட்டை-23, குண்டாறு-44, நெல்லை-5, கருப்பாநதி-4, களக்காடு- 12, கடனாநதி-24, ராமநதி-10, நம்பியாறு-29.

Next Story