முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
கூடலூர்
ஊட்டி, கூடலூர், கோத்தகிரியில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஊட்டி லோயர் பஜாரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. . விழாவின் 6-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. காலை 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆணவத்தோடு எதிரே வந்த போது, சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு வதம் செய்தார். தலைகளை மாற்றி சூரன் வர ஜெயந்தி நாதர் அசைந்தாடிய படி வதம் செய்தார். முடிவில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை ஒட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது.
அதேபோல் எல்க்ஹில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணி வரை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது.கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், காலை 9 மணி முதல் அபிஷேக அலங்கார பூஜைகள் நடநதது.
இதேபோல் கூடலூர் பகுதியிலுள்ள 1-ம் மைல் சக்தி முருகன், சூண்டி திருக்கல்யாண மலை, சந்தன மலை, பந்தலூர் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கூடலூர் சக்தி விநாயகர் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. காலை 9 மணி முதல் முருகப்பெருமானுக்கு பல்வேறு ஹோமங்கள், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு எளிய முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்தி மலையில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று காலை 9 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு சுப்பிரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றிருந்து, திருக்கோவிலை வலம் வந்து, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு முருகப்பெருமானுக்கு வள்ளி, தெய்வானை சகிதம் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story