தினத்தந்தி செய்தி எதிரொலி; வால்பாறை காட்சிமுனை பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வால்பாறை காட்சி முனை பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வால்பாறை காட்சி முனை பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
9-வது வளைவு காட்சிமுனை
மலைப்பிரதேசமான வால்பாறையில் சுற்றுலா மையங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் காட்சிமுனை உள்ளது.
இங்கு இருந்து பார்த்தால் ஆழியார் அணை, சமவெளிப்பகுதியில் உள்ள பசுமையான வயல்வெளிகள், வளைந்து, நெளிந்து செல்லும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையையும் கண்டு ரசிக்கலாம்.
‘தினத்தந்தி’யில் செய்தி
ஆனால் இங்கு பாதுகாப்பு வளையம் இல்லாததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அங்கு முட்செடிகள் வைத்து அடைக்கப் பட்டது.
இருந்தபோதிலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் அங்கு சென்று தடுப்புச்சுவர் மற்றும் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர்.
இதனால் அங்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பயனாக தற்போது வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து, அங்கு பாதுகாப்பு வளையம் அமைத்து உள்ளனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
மகிழ்ச்சி அளிக்கிறது
9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பாதுகாப்பு வளையம் இல்லாததால், அங்கு நின்று பார்க்கவே பயமாக இருந்தது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய அபாய நிலைதான் இருந்தது.
தற்போது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு பாதுகாப்பு வளையம் அமைத்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த காட்சி முனை தற்போது திறக்கப்பட்டு இருப்பதால் இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க முடிகிறது. மேலும் இங்கு விபத்துகள் நடப்பதை தடுக்க அவ்வப்போது போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து வந்தால் நன்றாக இருக்கும்.
மேலும் இங்கு தொலை நோக்கி இல்லம் அமைத்தால் இயற்கை காட்சிகளை பார்த்து மகிழலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
இந்த காட்சிமுனை இருக்கும் மலைப்பகுதியில் வரையாடுகள் அதிகம் உள்ளன. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரையாடுகளை தொந்தரவு செய்யக்கூடாது.
இரவு நேரங்களில் யாரும் இந்த காட்சிமுனை பகுதியில் மதுஅருந்துவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது.
மேலும் இந்த 9-வது கொண்டைஊசி வளைவு காட்சிமுனை பகுதியில் அமர்ந்து உணவு அருந்துவது பிளாஸ்டிக் பொருட்களை சாலையிலும் வனப்பகுதிக்குள்ளும் வீசியெறிவது, வனவிலங்கு களுக்கு திண்பண்டங்களை போடுவது, பாதுகாப்பு வளையங்கள் மீது ஏறுவது, சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவது போன்ற செயல் களிலும் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story