வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனும11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பேரூர்,
தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம்.
குறிப்பாக மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மூங்கில் தடி உதவியுடன் செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை வழிபடுவார்கள்.
இதையொட்டி வெள்ளியங்கிரி மலையேற பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.
ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து விட்டதால், வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இருட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது நேற்று முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்றும், மலையேறும் வழியில் பழங்குடியினர் 40 கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மகிழ்ச்சி
இதையடுத்து நேற்று காலை காலை முதலே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் மிகுந்த ஆர்வத்துடன் மலையேறினர்.
மேலும் முக்கிய நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும் மூங்கில் தடி தலா ரூ.30-க்கு கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story