அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசை தாக்கி விட்டு 4 கைதிகள் தப்பி ஓட்டம்


அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசை தாக்கி விட்டு 4 கைதிகள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2020 4:00 AM IST (Updated: 8 Nov 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

கழிவறை செல்வதாக கூறி போலீஸ் நிலைய வளாகத்திலேயே 2 போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு 4 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் எஸ்டேட், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 64). இவர், அதே பகுதியில் அலுமினியம் அச்சு சம்பந்தமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்துக்குள் இருந்த அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியை சேர்ந்த ஆனந்தராஜ்(30), முருகா(20), ராஜேஷ்(19), பாபு(21) மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களில் 17 வயது சிறுவனை மட்டும் ஜாமீனில் விடுவித்தனர். மற்ற 4 பேரையும் நேற்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு இருந்தனர்.

கைதிகள் 4 பேரையும் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் தங்க வைத்து இருந்தனர். நேற்று அதிகாலை அவர்கள் 4 பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர். இதனால் போலீஸ் நிலையத்தில் இரவு பணியில் இருந்த 2 போலீசார், கைதிகள் 4 பேரையும் அதே வளாகத்தில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது திடீரென கைதிகள் 4 பேரும் பாதுகாப்புக்கு வந்த 2 போலீசாரையும் தாக்கி, கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றும் முடியவில்லை.

இவை அனைத்தும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பரணிதரன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கொரட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் 3 பேர் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதிகள் 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் தப்பி ஓடிய 4 பேரில் ஆனந்தராஜ், முருகா, பாபு ஆகிய 3 பேர் மட்டும் ஆவடி அருகே பிடிபட்டதாகவும், ராஜேஷ் மட்டும் இன்னும் சிக்கவில்லை எனவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசாரை தாக்கிவிட்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story